செங்குன்றம்:
கிருஷ்ணகிரியை அடுத்த ஓசூரில் மாத்திரைகளுக்கான மூலப்பொருட்கள் தயார் செய்யும் நிறுவனம் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்கு இருந்து இங்கிலாந்துக்கு ஆஸ்துமா நோயை குணமாக்கும் மாத்திரைகள் தயாரிக்க பயன்படும் ரூ.4 கோடி மதிப்பிலான மூலப்பொருட்கள் அடங்கிய 540 மருந்து பெட்டிகளை கன்டெய்னரில் ஏற்றி கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு சென்றடைந்ததும் அந்த நிறுவனத்தினர் கன்டெய்னரில் இருந்த ‘சீலை’ உடைத்து பார்த்தபோது அதில் 260 பெட்டிகளில் ரூ.2½ கோடி மதிப்பிலான மருந்து மூலப்பொருட்கள் இல்லாமல், வெறும் மணல், செங்கல் வைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஓசூரில் இருந்து சென்னை துறைமுகம் கொண்டு செல்லும் வழியில் அந்த மருந்து மூலப்பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுபற்றி ஓசூர் நிறுவனம் சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. மாதவரம் உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
ஓசூரில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னரை ஓட்டி வந்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு (வயது 29) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கன்டெய்னர் ‘சீலை’ உடைக்காமல் நூதன முறையில் அதில் இருந்த மருந்து மூலப்பொருட்களை திருடியது தெரியவந்தது.
ஓசூரில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு அந்த கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ரமேஷ்பாபு, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல கொள்ளையன் அக்பர்(26) கூறியதன் பேரில் லாரியை மாதவரம் அடுத்த கொசப்பூர் அருகே உள்ள ஒரு லாரி ‘ஷெட்’டுக்கு கொண்டு சென்றார்.
அங்கு கன்டெய்னர் ‘சீலை’ உடைக்காமல் ‘வெல்டிங்’ மூலம் கன்டெய்னர் பெட்டியில் சிறிய அளவில் வெட்டி உள்ளே இருந்த மருந்து பெட்டிகளை திருடியது தெரியவந்தது. எடை குறையாமல் இருக்க செங்கல், மணல் மூட்டைகளை வைத்ததும், வெட்டி எடுக்கப்பட்ட பாகத்தை ‘வெல்டிங்’ செய்து விட்டு, அதன் தடம் தெரியாமல் இருக்க அதன்மீது பெயிண்டு அடித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ரமேஷ்பாபு, அவரது கூட்டாளியான எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த முகமதுஅலி ஜின்னா (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மருந்து மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அக்பரை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவான அக்பர் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் பதுங்கி இருந்த அக்பரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.