மயிலம்:
கோயம்புத்தூர் கிறிஸ்துவ தெரு கே.ஜி.சாவடியை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 30). தொழில்அதிபர்.
இவர் நேற்று மாலை காரில் வேளாங்கண்ணிக்கு சென்றார்.
பின்பு அங்கு பணி முடிந்ததும் மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரத்தூரில் இருக்கும் தனது மாமனார் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்.
காரில் அங்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அவர் சாலையோரம் உள்ள டீ கடை அருகே காரை நிறுத்தினார். பின்பு காரில் இருந்து இறங்கி டீ கடைக்கு சென்றார். அங்கு டீ குடித்துவிட்டு காருக்குள் வந்தார். வெகுநேரம் காரை ஓட்டியதால் அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர் காருக்குள் கண்ணாடியை ஏற்றிவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக 20 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்கள் பிரபாகரனின் கார் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். காருக்குள் தூங்கிக்கொண்டிருந்த பிரபாகரனை காரின் கதவை தட்டி எழுப்பினர். திடுக்கிட்டு எழுந்த அவர் கதவை திறந்து வெளியே வந்தார்.
அப்போது அந்த வாலிபர்கள் பிரபாகரனை சரமாரியாக தாக்கி ரோட்டில் தள்ளினர்.
உடனே ஒரு வாலிபர் பிரபாகரனின் காரில் ஏறி வேகமாக காரை ஓட்டி சென்றார். மற்ற 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
ரோட்டில் விழுந்து கிடந்த பிரபாகரன் எழுந்து மயிலம் போலீஸ்நிலையத்துக்கு சென்றார்.
தன்னை 3 வாலிபர்கள் தாக்கி விட்டு காரை கடத்தி சென்றுவிட்டனர் என்று புகார் கூறினார்.
அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் வழக்குபதிவு செய்தார். தொழில் அதிபரை தாக்கி காரை கடத்தி சென்ற 3 வாலிபர்கள் யார்? அவர்கள் வழிப்பறி கொள்ளையர்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார். 3 வாலிபர்களை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.