மும்பை:
சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான பிபா சார்பில் ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் அக்டோபர் 6-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இந்திய அணியில் மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் உள்ள ஷாஹுபுரி பகுதியில் வசித்து வரும் அனிகெட் ஜாதவ் இடம்பெற்றுள்ளார். ஜாதவின் தந்தை ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கோலாப்பூர் எம்.பி. சத்ரபதி சம்பாஜி ராஜே கால்பந்தாட்ட வீரர் அனிகெட் ஜாதவ் வீட்டுக்கு இன்று மதியம் சென்றார். உலகக் கோப்பையில் விளையாட ஜாதவ் தேர்வானதற்கு அவரது தாய், தந்தையருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, வறுமை நிலையில் வாடும் அவரது குடும்பத்துக்கு முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மும்பையில் உலக கோப்பை தொடர்பாக வைக்கப்படும் டிஜிட்டல் விளம்பர பலகைகளில் கண்டிப்பாக ஜாதவ் படம் இடம் பெறவேண்டும் எனவும் அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.