மும்பை:
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் இம்மாநிலத்தில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் இரு கட்சிகளுக்கும் சம அளவிலான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது சிவ சேனாவின் நிலைப்பாடாக உள்ளது.
ஆனால் கடந்த முறை தனித்துப்போட்டியிட்டு வெற்றி பெற்ற 122 தொகுதிகளைக் காட்டிலும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது பா.ஜனதாவின் நிலைப்பாடாக உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் சிவசேனா கட்சிக்கு செல்வாக்கு அதிக முள்ள சில தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை சிவசேனா நேற்று தன்னிச்சையாக வெளியிட்டது. அதன்படி மாநில உள்துறை மந்திரி தீபக் சேசர்கர், சாவந்த்வாதி தொகுதியிலும், மூத்த தலைவர் ராகேஷ் சிரேஸ்கர் கோலாப்பூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
மேலும் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்யா தாக்கரே மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் களமிறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. வோர்லி தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே, அவரது மகன் உத்தவ் தாக்கரே உள்பட அவரது குடும்பத்தினர் யாரும் இதுவரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. கட்சி பொறுப்புகளை மட்டுமே வகித்து வந்தனர்.
தற்போது தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
வோர்லி தொகுதியில் தற்போது சிவசேனாவின் சுனில் ஹிண்டே எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். ஆதித்யா தாக்கரேவுக்காக அவர் வேறு தொகுதிக்கு மாற உள்ளார். வோர்லி தொகுதி சிவசேனாவுக்கு மிகவும் செல்வாக்கு உள்ள தொகுதி. இந்த தொகுதியில் ஆதித்யா தாக்கரே வெற்றி பெறுவது உறுதி என கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.