செய்திகள்

இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசை நாளான இன்று மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் ராமேசுவரம் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மாலை மலர்

அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமின்றி மாசிமகா சிவராத்திரி, புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களிலும் புண்ணிய தலமான ராமேசுவரத்தில் ஏராளமானோர் திரண்டு மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசை நாளான இன்று மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் ராமேசுவரம் வந்து குவிந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

பின்னர் கோவிலின் 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி விட்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இதற்காக வெளிமாவட்ட மக்கள் நேற்றே ராமேசுவரம் வந்து தங்கி விட்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் கூடுதல் சூப்பிரண்டுகள் இன்பமணி, வெள்ளத்துரை, துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் பாலசுப் பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் கோவிலில் வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சுகாதார ஏற்பாடுகளை நகராட்சி கமி‌ஷனர் வீர முத்துக்குமார், ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.