வருடத்தின் ஒவ்வொரு மாதத்தில் வரும் அமாவாசை அன்று பக்தர்கள் விரதம் இருந்து புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். குறிப்பாக வருடத்தில் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாகும். புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் ஏராள மானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவர்.
நெல்லை-தூத்துக்குடியில் ஆறு, குளம் மற்றும் நீர்நிலைகளில் ஏராள மானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் திரளான பக்தர்கள் புனித நீராடி பின்னர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதையொட்டி கோவிலில் காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பின்னர் 5.30 மணிக்கு அபிஷேகம் மற்றும் அதனைத்தொடர்ந்து கால பூஜைகள் நடைபெற்றது. கோவிலுக்குள் செல்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். திருச்செந்தூரில் கூட்டம் அலைமேதியது. இதே போல் நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பகுதியிலும், வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் பகுதியிலும், குற்றாலம் அருவி பகுதியிலும் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.