செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர் கேட்டு மறியல்: மதுசூதனன் உள்பட 200 பேர் கைது

ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட பன்னீர்செல்வம் அணியினர் மதுசூதனன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

குடிநீர் குழாய்களில் தண்ணீர் சப்ளை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. லாரிகள் மூலம் மட்டும் வாரத்துக்கு ஒருமுறை குறிப்பிட்ட இடங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் தண்டையார் பேட்டை சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் காலி குடங்களுடன் வந்து இருந்தனர். அவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

அப்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுசூதனன் தலைமையில் திருவொற்றியூர் சாலையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மறியல் நடைபெற்ற இடம் முக்கிய சாலைகளின் சந்திப்பு என்பதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதே பகுதியில் அரசு தொற்றுநோய் மருத்துவமனை மற்றும் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது.

போக்குவரத்து நெரிசலில் ஆஸ்பத்திரிக்கு வந்த 5 ஆம்புலன்சுகளும் நோயாளிகளுடன் சிக்கி திணறியது.

வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் செ‌ஷன் சாய் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மசூதுதனன் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அனைத்து அரசு துறைகளும் செயல் இழந்து விட்டது. இப்போது ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறவில்லை. புரோக்கர்களின் ஆட்சி நடைபெறுகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைதான அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் பிரச்சினைக்காக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முதன் முதலாக போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.