கோப்பு படம் 
செய்திகள்

மதுராந்தகம் அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை

மதுராந்தகம் அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பூந்தமல்லி:

மதுராந்தகத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவரது மனைவி பாண்டியம்மாள். கடந்த 2 மாதத்துக்கு முன்பு குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலத்தில் வீடு எடுத்து 2 குழந்தைகளுடன் தனியாக தங்கி இருந்தார்.

நேற்று மாலை முருகன், பழந்தண்டலத்தில் உள்ள மனைவியை சந்திக்க வந்தார். அப்போது மனைவி பாண்டியம்மாள் வீட்டில் இல்லை. இதையடுத்து வீட்டில் இருந்த மகளும், மகனும் வெளியில் சென்று இருந்ததாய் பாண்டியம்மாளை அழைத்து வர சென்றார்.

அப்போது காரில் வந்த மர்ம கும்பல் முருகன் இருந்த வீட்டின் மீது 2 நாட்டு வெடி குண்டுகளை வீசினர். இதில் கதவு சேதம் அடைந்தது. உள்ளே புகுந்த கும்பல் முருகனை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க உதவி கமி‌ஷனர் செம்பேடுபாபு தலைமையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

கொலையாளிகள் தப்பிச் செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. ஆனால் அதில் கொலையாளிகள் உருவம் சரியாக தெரிய வில்லை. அதனை வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கொலையுண்ட முருகன் மீது சென்னை கே.கே.நகர், திருநெல்வேலி பகுதியில் கொலை வழக்குகள் உள்ளது. திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும் உள்ளன.

முருகன் ஜெயிலில் இருந்த போது பழந்தண்டலத்தை சேர்ந்த ரவுடியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கும் சோமங்கலத்தை சேர்ந்த ஒருவருக்கும் மோதல் இருந்து வந்தது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் முருகன் தரப்பினருக்கும் சோமங்கலத்தை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதன் பின்னரே முருகன் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

எனவே சோமங்கலத்தில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.