மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் கிரைம் பிராஞ்ச் அலுவலகம், தமிழக அரசின் சம்பள கணக்கு அலுவலகம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.
இதன் அருகே அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இதன் காரணமாக அந்த இடம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். போலீஸ் வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லும்.
இந்த நிலையில் இன்று காலை அந்த வழியே சென்றவர்கள் அரசு அலுவலக வாசலில் ஒரு மர்ம பை கிடப்பதை பார்த்தனர். நீண்ட நேரமாகியும் அந்த பையை யாரும் எடுக்கவில்லை. இதனால் பையில் என்ன இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது.
இதற்கிடையில் ஒரு சிலர் பையில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற பீதியை கிளப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் நிலையம் அருகே அரசு அலுவலக வாசலில் பை கிடந்ததால் யாராவது திட்டமிட்டு அங்கு வந்து வைத்திருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வர வழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் அந்த பையை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் வேட்டி, சட்டை உள்ளிட்ட துணிகளே இருந்தன. அதனை யார் இங்கு விட்டு சென்றார்கள்? என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம பை குறித்த தகவலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பதட்டம் நிலவியது.