மதுரை:
மத்திய-மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக நேற்று ஒரே நாளில் 406 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகரில் மட்டும் 183 வாகனங்கள் பிடிபட்டன.
மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களை ஓட்டிச் சென்ற 7,685 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகர் பகுதியில் 4,777, புறநகர் பகுதிகளில் 2,908 வாகனங்கள் ஆகும்.
ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது இது வரை 8,879 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 10,730 பேர் கைது செய்யப்பட்னர்.
இதில் மாநகர் பகுதியில் 3,639 வழக்குகள் பதிவு செய்து 3,853 பேர் கைது செய்யப்பட்டனர். புறநகர் பகுதிகளில் 4,949 வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 6,467 பேர் கைது செய்யப்பட்டனர்.
தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்குக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறும் அவ்வாறு இல்லாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே தடை உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது.
நேற்று மட்டும் 194 இருசக்கர வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.