செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 5-ந் தேதியும், திக் விஜயம் 6-ந் தேதியும் நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் பங்கேற் றனர். விழாவில் கலந்து கொண்ட பெண்கள் புதுத்தாலி அணிந்து கொண்டனர்.

இந்த விழாவின் முத்தாய்ப்பாக இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடை பெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு மே‌ஷ லக்கனத்தில் சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினர்.

தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் தேர்முட்டி வீதியில் திரண் டனர். சுவாமி- அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமி‌ஷனர் சைலேஷ்குமார் யாதவ், கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர்.

பெரிய தேரில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும், 2-வது தேரில் மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் பவனி வந்தனர். மாசி வீதிகள் பக்தர்கள் கூட்டத்தால் திணறியது.

SCROLL FOR NEXT