மதுரை:
கன்னியாகுமரி மகா சபா செயலாளரான நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அவர்கள் தமிழக அரசு நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழை வழங்குவதுடன் உரிய உத்தரவுகளையும் 8 வாரத்திற்குள் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.