மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி பகுதி முதல் ஒத்தக்கடை பகுதி வரை சாலைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்தது.
அந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் காரணமின்றி வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டுகள் மற்றும் தேவையான இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததே விபத்துக்கள் அதிகரிக்க காரணம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் தரப்பில் ஆஜரான வக்கீல், விபத்துக்களைக் குறைக்கும் நோக்கத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.), மதுரை, சென்னை, போக்குவரத்து ஆணையர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அடுக்கடுக்கான பேரிகார்டுகள் வைக்க காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து அவர்கள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.