மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெருந்துறை, தஞ்சை செங்கிபட்டி மற்றும் மதுரை தோப்பூர் உள்பட 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அந்த இடங்களை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பது உறுதியாகவில்லை.
இது தொடர்பாக மதுரை, தஞ்சாவூர், ஈரோடு மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார். இதேபோல் மதுரை மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பதில் அளிக்கையில், எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எந்த இடத்தில் அமையும் என்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றார்.
இதற்கிடையே மதுரை மற்றும் தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டி அந்தந்த பகுதி அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மனித சங்கிலி, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தின.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் இயக்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்வை வெளியிடக்கோரி மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 3 ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு டாக்டர் உள்ளார். இது ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ வசதி அளிப்பதற்கு போதுமானதாக இல்லை. எனவே தமிழகத்துக்கு உயர்தர சிகிச்சைக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அவசியமாகும்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மதுரையில் உள்ளன.தென் மாவட்டங்களின் மைய பகுதியாக விளங்கும் மதுரையில் தற்போது உயர்தர மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் இங்குள்ள மக்கள் தரமான சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால், தென் மாவட்ட மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும். அண்டை மாநிலமான கேரள மக்களும் பயன் அடைவார்கள்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்பட உள்ளது என்பதை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு 10.5.2017 அன்று மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினேன். இதுவரை உரிய பதில் இல்லை.
எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை உடனடியாக அறிவிக்கும்படி மத்திய சுகாதார துறை செயலாளர், எய்ம்ஸ் இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கு அமையும் என்பது தொடர்பான விளக்கத்தை அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளின் சுகாதார துறை செயலாளர்கள், எய்ம்ஸ் இயக்குநர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.