செய்திகள்

ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள ஆதீன மடங்களின் சொத்துகள், வருமானங்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

மதுரை:

சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

செங்கோல் ஆதீன மடத்துக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ளன. இந்த நிலங்கள் மூலம் வந்த வருமானத்தைக் கொண்டு, சமயப்பணிகளையும், தொண்டுகளையும் ஆதீனமடம் செய்து வந்தது.

இந்தநிலையில் சமீபகாலமாக நிர்வாகப்பணிகள் முறையாக செய்யப்படாததால், மடத்துக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதனால் கோவிலுக்கு வருமானம் இல்லாமல் போனதும், சமயப்பணிகள் தடைபட்டதும் தெரியவந்தது.

எனவே தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கலெக்டர்கள், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோரை கொண்ட குழு அமைத்து செங்கோல் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் நேரில் ஆஜராகி, “தமிழகம் முழுவதும் இதுபோன்ற ஆதீன மடங்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவை முறையாக பராமரிக்கப்படாமல், அவற்றின் மூலம் வரும் வருமான விவரங்கள் தெரியவில்லை. போதுமான வருமானம் இல்லாததால் பல ஆதீன மடங்களில் உரிய பூஜைகள் கூட நடப்பதில்லை. எனவே தமிழகத்தில் உள்ள 32 ஆதீன மடத்தின் தலைவர்களையும் எதிர்மனுதாரராக இந்த வழக்கில் சேர்த்து சொத்துக்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க உத்தரவிட வேண்டும்” என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள், “தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களின் தலைவர்களும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகிறார்கள். ஆதீன மட சொத்துகள், அவற்றின் மூலம் வரும் வருமானம் பற்றிய விவரங்களை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும், அவர் அதை உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #tamilnews