கோப்புபடம் 
செய்திகள்

மதுரையில் கொரோனா மரணம் குறைவாக தான் உள்ளது - அரசு ஆஸ்பத்திரி டீன் பேட்டி

மதுரையில் கொரோனா பாதிப்பு மரணம் குறைவாக தான் உள்ளது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அரசு ஆஸ்பத்திரி டீன் கூறினார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டீன் சங்குமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

மதுரையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதற்கேற்றப்படி படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி இருக்கிறோம். அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டு மற்றும் தோப்பூரில் 564 படுக்கை வசதிகள் இருந்தன. அதனை இப்போது 1,461 படுக்கைகளாக அதிகரித்து இருக்கிறோம். அதேபோல் 481 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 190 படுக்கை வசதிகள் காலியாக உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதற்கு ஏற்றப்படி கூடுதலாக 670 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் 97 டாக்டர்கள், 56 நர்சுகள், 120 சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை 400 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 27 ஆயுஷ் மற்றும் சித்தா டாக்டர்களை புதிதாக நியமித்து அவர்களுக்கு பயிற்சி அளித்து கொண்டு இருக்கிறோம். இதுதவிர 97 நர்சிங் கல்லூரி மாணவிகளை கொரோனா வார்டில் பணியமர்த்தி உள்ளோம். இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 71 கர்ப்பிணிகளுக்கு வெற்றிக்கரமாக சிகிச்சை அளித்து இருக்கிறோம். அதில் சிசேரியன் மூலம் 49 பேருக்கும், நார்மல் டெலிவரி மூலம் 22 பேருக்கும் குழந்தை பிறந்து இருக்கிறது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 45 டயாலிசஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை தந்து இருக்கிறோம். இதுவரை 2 ஆயிரத்து 386 கொரோனா நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து இருக்கிறோம். பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா இல்லை என்று வந்தவர்களுக்கு கூட சந்தேகத்தின் பேரில் சி.டி.ஸ்கேன் செய்து பார்க்கிறோம்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தவிர மற்ற நோய்களுக்கும் தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம். 952 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். நேற்று மட்டும் 2 ஆயிரத்து 694 புறநோயாளிகளுக்கு சிகிச்சை தந்து இருக்கிறோம். தினமும் 40 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 35 சிறிய அறுவை சிகிச்சைகள் செய்கிறோம். அதில் நடக்கும் மரணங்களை எல்லாம் கொரோனா மரணமாக கருத கூடாது. ஒரு நோயாளிக்கு பல பிரச்சினைகள் இருந்து அவருக்கு கொரோனா பாதிப்பும் இருந்து மரணம் ஏற்பட்டால் கூட அதனை கொரோனா மரணமாக பதிவு செய்கிறோம்.

கொரோனா இல்லாத மரணங்களை கொரோனா மரணமாக கணக்கெடுத்து கொள்ள வேண்டாம். ஏனென்றால் கொரோனா இல்லாத காலகட்டத்தில் கூட அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 500 முதல் 600 மரணங்கள் வரை நிகழும். எனவே சாதாரண மரணம் என்பது வேறு. கொரோனா மரணம் என்பது வேறு. நேற்றைய நிலவரப்படி அரசு ஆஸ்பத்திரியில் 847 படுக்கைகள் காலியாக தான் இருக்கிறது. எனவே படுக்கை வசதி இல்லை என்பது தவறான தகவல்கள் ஆகும். மதுரையில் கொரோனா பாதிப்பு மரணம் குறைவாக தான் உள்ளது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மதுரை மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். நேற்று கூட 2 ஆயிரத்து 250 பேருக்கு பரிசோதனை செய்து இருக்கிறோம். ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்துகளை கூட கொரோனா நோயாளிகளுக்கு வழங்குகிறோம். உலகின் 4 நாடுகளில் மட்டுமே இந்த மருந்து கிடைக்கிறது. இந்த மருந்தை மதுரைக்கும் தமிழக அரசு வழங்கி உள்ளது.