பால் தர பரிசோதனை கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் நடந்தது. 
செய்திகள்

பாலில் சோப்பு ஆயில் கலப்படம் கண்டுபிடிப்பு: விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

மதுரையில் பால் மாதிரிகள் தர பரிசோதனையில் சோப்பு ஆயில் கலப்படம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

மதுரை கோ.புதூரில் உள்ள பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பாலில் கலப்படம் உள்ளதா? என்பதை ஆராயும் தர பரிசோதனை நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். மதுரையில் பல்வேறு பகுதிகளில் இருந்து 108-க்கும் மேற்பட்ட பால் மாதிரிகள் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில் ஒரு பால் மாதிரியில் சோப்பு ஆயில் கலப்படம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணையை நடத்தி அறிக்கை தரும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் பாலில் ரசாயன கலப்படம் உள்ளதா? என்பதை கண்டறிய இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது. வருகிற 12-ந்தேதி மேலூரிலும், 14-ந்தேதி வாடிப்பட்டியிலும், 16-ந்தேதி திருமங்கலத்திலும், 19-ந்தேதி உசிலம்பட்டியிலும் பால் தர பரிசோதனை நடத்தப்படுகிறது.


பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பாலை எடுத்து வந்து இந்த முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.