செய்திகள்

மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் நடத்தப்படும் நவீனமயமாக்கப்பட்ட கேண்டீன்

மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் நடத்தப்படும் நவீனமயமாக்கப்பட்ட கேண்டீனை டி.ஐ.ஜி. திறந்து வைத்தார்.

மதுரை:

மதுரை மத்திய சிறையில் கைதிகளால் மீன் பண்ணை, இஸ்திரி தொழில் உள்ளிட்ட சிறுதொழில்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய சிறை வளாகத்தில் கைதிகளால் கேண்டீன் நடத்தப்பட்டு வந்தது. குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

தற்போது அந்த கேண்டீன் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதனை மதுரை மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. கனகராஜ் இன்று திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மத்திய சிறைச் சாலையில் கைதிகளால் நடத்தப்பட்டு வந்த கேண்டீன் நவீனமயமாக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இங்கு போலீஸ் அதிகாரிகளும், கைதிகளை பார்க்க வருபவர்களும், பொதுமக்களும் உணவு அருந்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

லாப நோக்கமின்றி செயல்படும் இந்த கேண்டீனில் குறைந்த விலைவில் உணவுகள் கிடைக்கும். இதற்காக கைதிகளுக்கு கேட்டரிங் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. கைதிகளின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கும் வகையில் இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

கேண்டீனில் வரும் வருமானத்தில் 20 சதவீதம் கைதிகளுக்கு சம்பளமாக வழங்கப்படும். மத்திய சிறைச்சாலையில் மூடப்பட்ட மீன்பண்ணை அடுத்த வாரம் முதல் இயங்கும். தமிழகம் முழுவதும் கைதிகளால் செயல்படுத்தப்படும் சிறுதொழில் மூலம் ரூ.37 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.