கோவை:
கோவை மதுக்கரை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). மரவேலை செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள அரிசிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர் கணேசனின் மருமகன்.
கடந்த சில நாட்களாக மாமனாரிடம் கணேசன் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு முறையாக சம்பளம் கொடுக்க வில்லை என்று மருமகன்- மாமனாருக்கு இடையே தகராறு ஏற்பட்டுவந்தது.
சம்பவத்தன்று விக்னேஷ் குடிபோதையில் மாமனார் வீட்டுக்கு சென்று சம்பளத்தை கேட்டார். குடிபோதையில் இருப்பதால் இப்போது பணம் தரமுடியாது என்று மாமனார் கூறினார். இதனையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து மாமனார் தலையில் அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்தது. காயம் அடைந்த அவரை அவரது மனைவி குமாரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து அவினாசி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வந்த கணேசன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து போலீசார் விக்னேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.