தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோட்டில் நேற்று ஒரு கார் தாறுமாறாக கட்டுப்பாடு இல்லாமல் சாலையில் சென்றது. இந்த கார் சாலை தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பத்திரிகைகளிலும், டி.வி.சேனல்களிலும் செய்தியாக வெளியாகின.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் வழக்குகளை இன்று காலையில் விசாரிக்க தொடங்கினார். அப்போது அவர், தாம்பரத்தில் நேற்று நடந்த விபத்து துரதிருஷ்டவசமானது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த 4 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
அவர் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து நீதிபதி கூறியதாவது:-
‘அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் மோட்டார் வாகன உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? வேகமாக, கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச் சென்று மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்கான தண்டனையை 2 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டப்பிரிவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். அந்த அறிக்கையில் படித்து பார்த்து விட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை வருகிற 17-ந் தேதிக்கு முடிவு செய்வேன்.’