செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது சென்னை ஐகோர்ட்

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தலைமை நீதிபதியும், செல்லாது என்று நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இவ்வழக்கு வேறு அமர்வுக்கு செல்கிறது. #18MLAsCaseVerdict #MLAsDisqualification #MadrasHighCourt

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

பின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான முதன்மை அமர்வுக் மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மதியம் 1.40 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது,  18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். அதேசமயம் தகுதிநீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பு கூறினார். இவ்வாறு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இனி மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு செல்லும். மூன்றாவது நீதிபதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். #18MLAsCaseVerdict #MLAsDisqualification #18MLAs #MadrasHighCourt

SCROLL FOR NEXT