செய்திகள்

ஜெயலலிதா மகள் என்பதற்கு ஆதாரமில்லை - அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை கோரி அம்ருதா தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #Jayalalithaa #Amrutha #DNAtest

மாலை மலர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது.

ஜெயலலிதாவின் சகோதரி என கூறப்படும் சைலஜா, அம்ருதாவை வளர்த்து வந்ததாக வழக்கில் வைக்கப்படும் வாதத்தில் உண்மையில்லை எனக் குறிப்பிட்ட அரசின் வழக்கறிஞர், தனது சகோதரரி ஜெயலலிதா எனக்கூறி வார இதழுக்கு பேட்டியளித்த சைலஜாவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவே அவதூறு வழக்கு தொடர்ந்ததற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

இதற்கு பதிலளித்த அம்ருதா தரப்பு வழக்கறிஞர், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க அம்ருதாவுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், டி.என்.ஏ. சோதனை நடத்தினால் மட்டுமே தனது தரப்பு நியாயங்கள் உண்மை என்பது தெரிய வரும் என்றும் வாதிட்டார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசின் வழக்கறிஞர், எந்த ஒரு ஆதாரங்களும் தாக்கல் செய்யாமல் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் மர்மமாகவே இருந்ததாக கருத்து தெரிவித்தார்.