செய்திகள்

மாடுகளுக்கு பதிலாக சிறுவயது மகள்களை வைத்து உழவு: மத்திய பிரதேச விவசாயிகளின் அவலநிலை

தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக மத்திய பிரதேச விவசாயி தனது சிறுவயது மகள்களை வைத்து உழவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதனால், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இருப்பினும் பல்வேறு இன்னல்களையும் தாண்டி லட்சகணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக மத்திய பிரதேச விவசாயிக ஒருவர் தங்களது சிறுவயது மகள்களை வைத்து உழவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து விவசாயி சர்தார் பரேலா கூறுகையில், “மாடுகள் வாங்க போதிய பண வசதி இல்லை. மக்காச்சோளம் பயிரிடுவதற்கு உழவு செய்ய வேண்டியுள்ளது. எனது மகள்கள் எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டனர்” என்றார். 

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆஷிஷ் சர்மா, ’சிறுவர்கள் இது போன்ற உழவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும், எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாகவும்’ கூறினர்.