செய்திகள்

கழிவறைக்குள் பிறந்து சாக்கடைக்குள் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் கழிவறைக்குள் பிறந்து சாக்கடைக்குள் விழுந்த குழந்தை 2 மணிநேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டது.

மாலை மலர்

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டம் சம்பல் பகுதியில் உள்ள பாங்ராட் கிராமத்தை சேர்ந்தவர் பபிதா குர்ஜார் (வயது 28). நிறைமாத கர்ப்பிணிஆக இருந்த அவர் கழிவறைக்கு சென்றுவந்தார்.

திரும்பி வந்த சிறிது நேரத்தில் தனக்கு கடுமையான வயிற்றுவலி இருப்பதாக துடித்தார். எனவே பிரசவவலி வந்துவிட்டதாக கருதி அவரது கணவர் கன்ஷியாம் அவரை விஜயபுரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பபிதாவின் கர்ப்பபையில் குழந்தை இல்லை என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதன்பின்னர் தான் அவர் கழிவறைக்கு சென்றபோது அங்கேயே குழந்தை பிறந்து, அது சாக்கடை தொட்டிக்குள் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது.

உடனே அங்கு சென்று பார்த்தபோது குழந்தை சாக்கடை தொட்டிக்குள் கிடந்தது. பிறந்து 2 மணி நேரம் தொட்டிக்குள் கிடந்த குழந்தை உயிருடன் இருந்தது.

உடனே அதை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.