சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்த இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் கேட்டிருந்தனர். இதனால் தேர்தல் அலுவலக வளாகம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இன்று மதியம் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேட்பு மனுவை அளித்தார். இதேபோல் டிடிவி தினகரனும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் புதிய கொடியுடன் ஆதரவாளர்களுடன் வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்கினார்.
அதன்பின்னர் பிற்பகல் 1.40 மணியளவில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மதுசூதனன், இரட்டைக் குழல் துப்பாக்கி தங்களிடம் இருப்பதாகவும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என தினகரன் கனவு காண்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது டிடிவி தினகரன் புதிய கொடியுடன் வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான். தேர்தல் ஆணைய தீர்ப்புக்கு எதிராக கொடியை பயன்படுத்தது சட்டப்படி தவறு. இரட்டை இலையை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
அ.தி.மு.க.வில் உரிமை கோர தினகரனுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை.
தி.மு.க. தான் எங்களுக்கு போட்டி. தினகரனை ஒரு பொருட்டாக கருதவில்லை” என்றார்.