சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்-நேருபூங்கா வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது.
சென்ட்ரல்- வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், விம்கோ நகர் வரை மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் நீட்டிப்பு செய்யப்பட்டு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
2-வது கட்டமாக மாதவரம் முதல் சிறுசேரி வரை 108.4 கி.மீட்டர் தூரம் மெட்ரோ பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 104 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள ஐ.டி. கம்பெனிகளை இணைக்கும் விதமாக இந்த மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளது.
ஐ.டி. கம்பெனிகள் நிறைந்துள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான கார், வேன், பஸ்கள், இருசக்கர வாகனங்கள் கடந்து செல்லப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, அதிக காலதாமதம் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாகவும் ஐ.டி. கம்பெனி ஊழியர்களை கவரும் விதமாகவும் இந்த பகுதிக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிக்கு செல்வோர் எளிதில் செல்வதற்கும் விரைவான போக்குவரத்து பயணமாக மெட்ரோ ரெயில் பயணம் அமைய உள்ளது.
மாதவரம்-சிறுசேரி ரெயில் திட்டப்பணிகள் ரூ.85047 கோடியில் அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு (2018) பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 22 உயர்மட்ட ரெயில் நிலையங்களும் 82 சுரங்க ரெயில் நிலையங்களும் கட்டப்பட உள்ளன.
இந்த ரெயில் திட்டப்பணிகள் 10 ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ரெயில் திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது. அடுத்த ஆண்டு பணிகள் தொடங்கப்படுவதையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 80 சதவீத பணிகள் பூமிக்கடியில் நடைபெற உள்ளது. 18 மீட்டர் (60அடி) ஆழத்தில் இந்த ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. 14 மீட்டர் ஆழத்தில் ரெயில் நிலையங்கள் கட்டப்படுகிறது. டிக்கெட் கவுண்டர்கள், மின்வசதி, தொலை தொடர்பு, கட்டுப்பாட்டு அறைகள், லிப்ட்டுகள், எஸ்கலேட்டர்கள், காற்றோட்ட வசதிகள், நவீன மின்விளக்கு வசதிகள் அனைத்தும் அமைக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாதவரம்-சிறுசேரி வரையிலான 2-வது கட்ட மெட்ரோ பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்.
மாதவரம் மில்க் காலனி முதல் அடையார் டெப்போ வரையில் பூமிக்கடியில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்படும். அதைதொடர்ந்து பழைய மகாபலிபுரம் சாலையில் உயர்மட்ட பாதையில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக சாலைகள் விரிவாக்கப்பட உள்ளது.
ஆயிரம் விளக்கு, கோயம்பேடு, அண்ணாசாலை, கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள். அங்கு சுரங்கப் பாதையில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் 10 ஆண்டுகளில் நிறைவுபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.