தென் மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான 4500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் 23-ந் தேதி அறிவித்தது. இந்த டெண்டர் காலம் 2018-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இதுவரை மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த டெண்டர் முறை மாற்றப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக டெண்டர் என்ற புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. இந்த புதிய நடை முறை மூலம் ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ? அந்த மாநிலத்தில் நடைபெறும் டெண்டரில் தான் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளதால் மற்ற லாரிகள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அளவிலான வாடகை டெண்டர் முறையை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று முதல் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தென் மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.
அதன்படி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதனால் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் இயங்கி வந்த 4500 லாரிகளும் இயங்கவில்லை.
இதில் பெரும்பாலான கியாஸ் டேங்கர் லாரிகள் நாமக்கல் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல லாரிகளில் செட்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த பேராட்டத்தால் எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. விரைவில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது.
இது குறித்து தென் மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறுகையில், தென் மண்டல அளவில் வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி உள்ளது. எங்களது கோரிக்கையான மண்டல வாரியான டெண்டரை முன்பு போல அமல்படுத்த வேண்டும், அது வரை எங்கள் போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதே கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு மண்டலத்திலும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #LPGTankerLorry #tamilnews