நாமக்கல்:
எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் முறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதுவரை மண்டல வாரியாக டெண்டர் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தந்த மாநிலங்களில் புதியதாக டெண்டர் நடத்தப்படும் என்றும், அதில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெண்டர் தொடர்பான புதிய அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் வேலைநிறுத்தம் செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், மத்திய அரசின் புதிய டெண்டர் முறையை கைவிட வேண்டும், கடந்த காலங்களில் நடைபெற்றது போலவே டெண்டர் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
டேங்கர் லாரிகளை இயக்காமல் போராட்டம் நீடித்தால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. #LPGTankerLorry #Tamilnews