செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் இளம்வைதி (வயது 32).இவரது மனைவி கனிமொழி (27) . இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நித்தீஸ் (6) தீபக் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இளம்வைதி சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மாதத்திற்கு இருமுறை ஊருக்கு வந்து செல்வார். நேற்று வீட்டிற்கு வந்த அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கனிமொழி வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். கனிமொழியின் தந்தை கண்ணையன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் கனிமொழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக கனிமொழி தற்கொலை செய்தாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.