ஸ்ரீவைகுண்டம்:
சென்னை மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் அப்பகுதியை சேர்ந்த வேலு என்ற வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான லாரி ஷெட்டில் சூளைமேட்டை சேர்ந்த ரவுடி பினு தனது கூட்டாளிகள் 100 பேருடன் கடந்த 6-ந்தேதி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினான்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திரண்டிருந்த 75 ரவுடிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர். ஆனால் ரவுடி பினு, தனது கூட்டாளிகள் சிலருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
தலைமறைவாக இருந்த ரவுடி பினுவையும், பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்த லாரி செட்டின் உரிமையாளரான வேலு என்கிற வேல்முருகனை உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரவுடி பினு அம்பத்தூர் துணை கமிஷனர் சர்வேஸ் ராஜ் முன்பு நேற்று திடீரென சரண் அடைந்தான். இதையடுத்து பினு கைது செய்யப்பட்டான். இதனை தொடர்ந்து அவன் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பினுவையும், தப்பி ஓடிய அவனது கூட்டாளிகளையும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து என் கவுண்டர் பீதியும் நிலவியது. இந்த நிலையில்தான் ரவுடி பினு போலீஸ் அதிகாரி முன்பு சரண் அடைந்துள்ளான். போலீஸ் என்கவுண்டருக்கு பயந்தே பினு சரண் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ரவுடிகள் பிறந்த நாள் கொண்டாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த லாரி ஷெட்டின் உரிமையாளரான வேலு என்ற வேல்முருகன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். #tamilnews