நாமகிரிப்பேட்டை:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மணிவிழுந்தான் காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் தரணிதரன் (வயது 20). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காக்காவேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் படிப்பு சம்பந்தமாக நேற்று மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் இருந்து கல்லூரிக்கு மாணவர் தரணிதரன் வந்தார். பின்னர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமகிரிப்பேட்டை அருகே கத்தபுளியமரம் நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஆத்தூரில் இருந்து நாமகிரிப்பேட்டை நோக்கி சென்ற லாரியும், மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதி கொண்டன.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தரணிதரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து சென்று விட்டார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார். கல்லூரிக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் அவர் வசித்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.