செய்திகள்

தொப்பூர் அருகே கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி டிரைவர் பலி

தொப்பூர் அருகே இன்று அதிகாலை கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதியது. இதில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

நல்லம்பள்ளி:

ஆந்திரா மாநிலம் குப்பத்தில் இருந்து மதுரைக்கு கடப்பா கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தர்மபுரி மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த பைரவன் மகன் ராஜா (வயது 35) என்பவர் ஓட்டினார். கிளீனராக கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த மாதவன்(50) என்பவர் உடன் வந்தார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி வந்தபோது டிரைவர் ராஜா பிரேக் போட முயன்றார். ஆனால் லாரியின் பிரேக் பிடிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் டிரைவர் ராஜாவின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதி மறுபக்கத் தில் உள்ள சாலையில் டமார் என பலத்த சத்தத்துடன் கவிழ்ந்தது.

இதில் டிரைவர் ராஜா மறுபுறம் சாலையில் தூக்கி வீசப்பட்டு 100 மீட்டர் தூரத்திற்கு தரதரவென இழுத்து செல்லப்பட்டு எதிரே திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வாரணாசிக்கு குளிர்பானம் ஏற்றிக் கொண்டு சென்ற டாரஸ் லாரியின் டயரில் சிக்கினார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டாரஸ் லாரியின் டிரைவர் செல்வராஜ் (33) உடனே பிரேக் போட்டார். ஆனால் வேகமாக சென்று கொண்டிருந்தபோது பிரேக் போட்டதால் டாரஸ் லாரி நிற்காமல் சென்று ராஜா மீது ஏறி இறங்கி சென்று கவிழ்ந்து கிடந்த கிரானைட் லாரி மீது மோதி நின்றது.

இதில் டிரைவர் ராஜா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த கிளீனர் மாதவன் முன்னதாக பிரேக் பிடிக்காததை அறிந்ததும் லாரியில் இருந்து குதித்து விட்டார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த இந்த விபத்து சம்பவம் திரைப்படங்களில் வரும் விபத்து காட்சிகள் போல் இருந்தது. ஒன்றுடன் ஒன்றாக அடுத்தடுத்து லாரிகள் மோதிய சம்பவத்தாலும், லாரியில் இருந்த கிரானைட் கற்கள் சாலையில் சரிந்து கிடந்ததாலும் தர்மபுரி-சேலம் சாலையில் வாகனங்கள் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதுபோல் தொப்பூர் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர்.

போக்குவரத்தை சரி செய்ய வாகனங்கள் அனைத்தும் ஒரு வழிபாதையாக திருப்பி விடப்பட்டது.

இதையடுத்து கிரானைட் கற்களை அகற்றி லாரியின் இடிபாடுகளில் இருந்து டிரைவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜே.சி.பி.வாகனம் வர வழைக்கப்பட்டு லாரியையும், டாரஸ் லாரியும் போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இந்த விபத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.