தா.பேட்டை:
தா.பேட்டை அருகே அய்யம்பாளையம் மெயின் ரோடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் வாலிபர் ஒருவர் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதியில் வெட்டு பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த முசிறி டி.எஸ்.பி. கோவிந்தராஜ் தலைமையில் ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். மேலும் கொலை செய்யப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அப்பண்ண நல்லூர் கிராமத்தை சேர்ந்த குமரவேல் (வயது 37), லாரி டிரைவர் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி அமுதா (25)என்ற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர்.
குமரவேல் குடும்பத்துடன் திருப்பூர் அருகே பூலாம்பட்டியில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், தனது மாமியார் ஊரான தா.பேட்டை அடுத்த கண்ணணூர் அய்யம்பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளார்.
அங்கு குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடி விட்டு இரவு மாமியார் வீட்டிலேயே தங்கியிருந்தார். இன்று அதிகாலை தனது சொந்த ஊரான அப்பண்ணநல்லூருக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார்.
பின்னர் அய்யம்பாயைம் பகுதியில் செல்லும் போது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குமரவேல் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், குமரவேல் கொலை செய்யப்பட்ட இடத்தில் அவரின் செல்போன் இல்லை. இதனால் அவருக்கு தெரிந்த நபர்களே போனில் பேசி வரவழைத்து கொலை செய்தனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews