விபத்து 
செய்திகள்

திருச்சி அருகே லாரி மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி- மனைவி காயம்

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள். திருமணமான 3-வது நாளில் நிகழ்ந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

லால்குடி:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சாலக்குடி கீழத்தெருவை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் மோகன் (வயது 24), பெயிண்டர். இவரும் திருச்சி அருகே உள்ள முள்ளிகுரும் பூர் பகுதியை சேர்ந்த ரகு நாதன் மகள் ரமணி(20) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மோகன்-ரமணிக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் விருந்துக்காக புதுமண தம்பதியினர் அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்று வந்தனர். நேற்று திருச்சி அருகே உள்ள மாமா வீட்டிற்கு சென்றனர். விருந்து முடிந்தவுடன் தனது நெருங்கிய நண்பரான லால்குடியை சேர்ந்த ரஞ்சித்(24) என்பவருடன் மோகன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்ட, மோகனும், ரமணியும் பின்னால் அமர்ந்து வந்தனர். 

திருச்சி-லால்குடி இடையே வாழாடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்கு பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த மோகன், மனைவி கண்முன்னே சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரமணியும், ரஞ்சித்தும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதையடுத்து  அப்பகுதி மக்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்  சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே மோகனின் நண்பர் ரஞ்சித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரமணி திருச்சியில் உள்ள  தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து , லாரி டிரைவர் டால்மியாபுரம் கல்லக்குடியை சேர்ந்த மணிகண்டன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3-வது நாளிலேயே நிகழ்ந்த இந்த துயர சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.