செய்திகள்

தலைமறைவான கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

மேற்கு வங்கத்தில் தனி மாநில கோரிக்கைக்காக போராடி வரும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங்கிற்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மாலை மலர்

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலைப்பிரதேசத்தை பிரித்து கூர்காலாந்து என்ற தனி மாநிலம் அமைக்கக்கோரி கூர்க்காலாந்து ஜனமுக்தி மோர்ச்சா கட்சி (ஜிஜேஎம்) சார்பில் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விரும்பத்தகாத வன்முறை தாக்குதல்களுடன் நீடித்து வரும் இப்போராட்டம் இன்று 79-வது நாளை எட்டியுள்ளது.

தனி மாநில கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், ஜிஜேஎம் கட்சியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. போராட்டத்தை செப்டம்பர் 12-ம் தேதிவரை ஒத்திவைப்பதாக ஒருங்கிணைப்பாளர் பினய் தமங் அறிவித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த கட்சியின் தலைவர் பிமல் குருங், ஒருங்கிணைப்பாளரை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிமல் குருங் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீசார் தேடுவதை அறிந்ததும், பிமல் குருங் தலைமறைவாகிவிட்டார். ஆனாலும், ஆடியோ தகவல்கள் மூலம் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை நடத்தி வருகிறார். இதையடுத்து அவருக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.