செய்திகள்

பட்ஜெட் கூட்டத் தொடர்: பாராளுமன்ற கட்சி தலைவர்களுக்கு மக்களவை சபாநாயகர் அழைப்பு

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிப்பதற்காக சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாராளுமன்ற கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு வரும் ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9-ம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் நாளில் (ஜனவரி 29) பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தின் உரையுடன் இந்த அமர்வு தொடங்குகிறது. இரண்டாம் அமர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி நிறைவடைகிறது.

பாராளுமன்றத் தேர்தல் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பதால், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்களை நாளை சந்தித்து பேச மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முடிவு செய்துள்ளார். இதற்காக பாராளுமன்ற கட்சி தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல் அரசு சார்பிலும் ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது, கூட்டத் தொடரில் விவாதிக்கப்படவேண்டிய விவகாரங்கள் குறித்து தங்களின் கருத்துக்களை கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் என்பதால் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் பரபரப்பாகவே செல்லும். #Tamilnews