செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் வாக்குச்சாவடிகள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்- தீ வைப்பு

ஐந்தாம் கட்ட பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் வாக்குச்சாவடிகள் மீது வெடிகுண்டு வீசியும், தீ வைத்தும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaElections2019

மாலை மலர்

பாராளுமன்ற 5-வது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்துவருகின்றனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருசில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அனந்த்நாக் பாராளுமன்றத் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில், ஒரு வாக்குச்சாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஹ்மூ பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல் சோபியான் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் இருந்த 2 பள்ளி கட்டிடங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

மேற்கு வங்க மாநிலம் பாரக்பூர் தொகுதியில் ஏற்பட்ட தகராறின்போது, பாஜக வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கினர். பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங், வாக்களித்து விட்டு வெளியே வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.