செய்திகள்

தஞ்சையில் வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளை

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள தளவாய்பாளையம் நெய்வாசல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவர் குடியிருந்து வரும் பகுதியில் பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இதனால் மர்ம நபர்கள் அங்கு பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முருகேசன் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டனர். தற்போது வெயில் கொளுத்தி வருவதால் முருகேசன் வீட்டுவாசலில் உள்ள திண்ணையில் இரவு தூங்கி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு வாசலில் உள்ள திண்ணையில் முருகேசன் படுத்து தூங்கியுள்ளார். அவரது செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்த மர்ம நபர்கள் அவர் அசந்து தூங்கியதை உறுதி செய்துவிட்டு பின்பக்க கதவை நைசாக உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10¾ பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

நேற்று அதிகாலை எழுந்த முருகேசன் கதவை திறந்து வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அம்மா பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்பநாய் மூலம் துப்பு துலக்கினர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை,பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.