செய்திகள்

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் ஜி.கே.வாசன்

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கான பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட 6 மாத காலத்திற்குள் உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற்று பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இச்சூழலில் தமிழக அரசு உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்த முறையான இட ஒதுக்கீடு வழங்காத காரணத்தால், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பான இட ஒதுக்கீட்டை இன்னும் சரிவர முடிவுக்கு கொண்டு வரவில்லை.

இச்சூழலில் தற்போது தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகளை வரையறை செய்வதற்கு புதிய சட்டமசோதாவை பேரவையில் நிறைவேற்றியிருக்கிறது. இது தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயக்கம் காட்டுவதாகவும், பலவீனமாக இருப்பதையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

எனவே தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் உடனடியாக உள்ளாட்சிக்கு தேர்தலை நடத்த வேண்டும். மேலும் தேர்தல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு காலம் தாழ்த்தாமல் தன்னிச்சையாக, சுதந்திரமாக செயல்பட்டு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டியது தமிழக தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருக்கிறது.

உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளை கொண்டு உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மக்கள் நலன் காக்கவும் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி தேர்தலை உரிய காலத்தில், முறையாக நடத்த வேண்டியது தான் ஜனநாயகத்தில் மாநில அரசின் கடமை.

எனவே தமிழக அரசு உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தலை உடனடியாக நடத்த நீதிமன்றத்தில் உள்ள வழக்குக்கு நியாயமாக தீர்வு கண்டு, முழு ஒத்துழைப்பு நல்கிடவும் மற்றும் தேர்தல் ஆணையமும் இட ஒதுக்கீட்டு முறையை உள்ளாட்சி தேர்தலில் முறையாக, முழுமையாக அமல்படுத்தி ஒரு காலக்கெடுவிற்குள் தேர்தலை விரைந்து நடத்திடவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT