செய்திகள்

மழைக்காலம் வருவதால் உள்ளாட்சி தேர்தல் மேலும் தாமதம்: அடுத்த ஆண்டுதான் நடக்க வாய்ப்பு

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் மேலும் தாமதம் ஆகலாம். அடுத்த ஆண்டுதான் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 நகர பஞ்சாயத்துகள், 385 ஒன்றிய அமைப்புகள், 32 மாவட்ட பஞ்சாயத்துகள், 12,620 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தப்படுகிறது.

கடைசியாக 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தேர்வானவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்தது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அக்டோபர் 17, 19-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளை பெண்களுக்கும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்ததில் தெளிவில்லை என்றும், தேர்தல் அறிவிக்கை வெளியிட்ட மறுநாளே விண்ணப்ப மனு தாக்கல் தொடங்குவதால் எதிர்க்கட்சிகளுக்கு போதிய கால அவகாசம் தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இது குறித்து கோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து அறிவித்தது. இதனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது தள்ளிப் போனது.

இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன் பிறகு ஜெயலலிதா மரணம் மற்றும் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி பல்வேறு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தலைமை யில் நடந்து வந்தன. தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

கடந்த மாதம் அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட் டது. நவம்பர் மாதம் 17-ந் தேதிக்கு முன்னதாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவு ஏற்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை.

இதற்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க., சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. “கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டுவது அவமதிப்பாகும்.” என்று தி.மு.க. தனது மனுவில் கூறி இருந்தது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கோர்ட்டு அறிவுறுத்தலுக்கு ஏற்ப இந்த ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்த 50 நாட்கள் தேவைப்படும். அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல், அட்டவணை தயாரிப்பு, ஓட்டுப்பதிவு மையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சி உள்ளிட்ட பணிகள் முழுமையாக முடிந்து இருக்க வேண்டும்.

ஆனால் இவை எதுவும் இன்னும் நடத்தப்பட்டு முழுமை பெறவில்லை. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டப்படி தயாராகவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராகுமாறு இதுவரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமானால் பள்ளிக் கூடங்கள், சமுதாய நலக்கூடங்கள் ஆகியவற்றை ஓட்டுப்பதிவு மையங்களாக மாற்ற வேண்டும். ஆனால் தற்போது இதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

தற்போது மழைக் காலம் தொடங்கி விட்டதால் சமுதாய நல கூடங்கள் அனைத்தையும் மழை நிவாரண பணிகளுக்கு அதிகாரிகள் தயார் செய்து வருகிறார்கள். மேலும் மழை காலத்தில் ஓட்டுப்பதிவை நடத்த இயலாது.

அது போல மழை நிவாரண பணிகளுக்கு தயாராகி வரும் ஊழியர்களை, உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளுக்கு மாற்ற இயலாது. மழை கால நிவாரண பணிகள் டிசம்பர் வரை நடைபெற உள்ளது.

எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிகாரிகளால் இந்த ஆண்டு இறுதி வரை கவனம் செலுத்த இயலாது என்கிறார்கள். இதனால் உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகும் என்று தெரிய வந்துள்ளது.