திருப்பூர்:
உள்நாட்டு சந்தைக்கு பின்னலாடை தயாரிக்கும் நிறுவனங்கள் திருப்பூரில் ஏராளமாக உள்ளன. பருவ காலம் மற்றும் பண்டிகை கால ஆடைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கி ஆடை தயாரித்து பெறுகின்றனர். கொரோனாவின் இரண்டு அலைகளும் திருப்பூர் பின்னலாடை துறையை கடுமையாக பாதிக்கச் செய்தது.
கைவசம் ஆர்டர் இருந்தும் ஆடை தயாரிக்க முடியாமை, தொழிலாளர் பற்றாக்குறை, உற்பத்தி செய்து அனுப்பிய ஆடைகளுக்கு வர்த்தகரிடம் பணம் பெறுவதில் சிக்கல் என அடுக்கடுக்கான பிரச்சினைகள் உருவாகி நெருக்கடி தந்தன. தற்போது இரண்டாவது அலை ஓய்ந்து கட்டுப்பாடுகள் விலகியதையடுத்து கடந்த மே மாதம் முதல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்கின.
சொந்த ஊர் சென்ற வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூர் நோக்கி திரும்பி வருகின்றனர். ஓணம் பண்டிகை, வருகிற 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் மாதம் நவராத்திரி விழா, நவம்பர் 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பண்டிகை கால ஆடை தயாரிப்பில் திருப்பூர் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முனைப்பு காட்டிவருகின்றன.
இதுகுறித்து லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது;
கடந்த ஆண்டிலும் ஊரடங்கிற்கு பின் திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புகள் சிறப்பாக அமைந்தது. பிரபல நிறுவனங்களிடம் கூட உள்ளாடை ரகங்கள் இருப்பு இல்லை என்ற நிலை உருவானது.
இரண்டாவது அலை ஓய்ந்துள்ளதையடுத்து தற்போது உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்தாண்டு ஓணம் பண்டிகைக்காக அதிகளவு ஆடை தயாரிக்கப்பட்டு கேரள வர்த்தகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் வருகின்றன.
பண்டிகைக்காக குழந்தைகள், ஆண்கள், பெண்களுக்கான உள்ளாடை ரகங்கள், டி சர்ட் உட்பட அனைத்துவகை பின்னலாடை தயாரிப்பும் வேகமாக நடந்துவருகிறது. 80 சதவீத தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி விட்டனர். கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் ஊரடங்கு என்ற நிலை மட்டும் ஏற்படாமல் இருந்தால் இந்தாண்டு பண்டிகை கால வர்த்தகம் சிறப்பாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.