செய்திகள்

பல்லி விழுந்த குளிர்பானம் குடித்ததால் மயக்கம்: தாய்-2 குழந்தைகளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

நாங்குநேரி அருகே பல்லி விழுந்த குளிர் பானத்தை அருந்திய தாய், மகள்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33) விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி (29) என்ற மனைவியும், பெபினா (7), பிருந்தா (5) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முத்து லெட்சுமி வீட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி வந்தார்.

பின்னர் குளிர்பானத்தை அருந்திய முத்துலெட்சுமி தனது மகள்களான பெபினா, பிருந்தா ஆகியோருக்கும் குளிர்பானத்தை குடிக்க கொடுத்தார். குளிர்பானம் அருந்திய சிறிது நேரத்தில் முத்துலெட்சுமிக்கும், அவரது மகள்களுக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிப் பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே குளிர்பான பாட்டிலை பார்த்த போது அதில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது.

பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை அருந்தியதாலேயே அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லி விழுந்த குளிர் பானத்தை அருந்திய தாய், மகள்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முத்துலட்சுமி மற்றும் அவரது 2 குழந்தைகளுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.