மதுரை டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்ற குடி மகன்கள். 
செய்திகள்

மதுரை டாஸ்மாக் கடைகளில் திரண்ட மது பிரியர்கள்- செல்லூரில் பெண்கள் போராட்டம்

மதுரையில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் முக கவசம் அணிந்து ஆதார் கார்டுகளுடன் மது பிரியர்கள் கடைகளில் திரண்டனர்.

மாலை மலர்

மதுரை:

தமிழகத்தில் ஊரடங்கு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று (7-ந்தேதி) முதல் சென்னை தவிர மற்ற பகுதிகளில கடும் நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 30 மதுக்கடைகள் தவிர சுமார் 250 மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டன.

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மதுக்கடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடை முன்பு கூட்ட நெரிசலை தவிர்க்க கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது.

காலை 10 மணிக்கு மதுரையில் பெரும்பாலான கடைகளில் 200-க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் திரள ஆரம்பித்தனர். இதனால் அங்கு நின்றிருந்த போலீசார் மது வாங்க வந்த நபரின் ஆதார் கார்டினை பார்த்து வரிசையில் நிற்க வைத்தனர்.

பின்னர் முக கவசம் அணிந்து கியூவில் நின்ற மது பிரியர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அரசு மற்றும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.

நிபந்தனைகள் காரணமாக சில இடங்களில் மது பிரியர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் பல இடங்களில மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

செல்லூரில் இன்று மதுக்கடை திறக்கப்பட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் மதுக்கடை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடை முன்பு மது வாங்க நின்றிருந்தவர்களிடமும் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரத்தில் அந்த டாஸ்மாக்கடை மூடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 121 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் 16 டாஸ்மாக் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.

இந்த 16 கடைகளும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளன. எனவே இவை திறக்கப்படவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 176 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் கொரோனா நோய் தொற்று அதிக பாதிப்பு இடங்களில் உள்ள 8 கடைகளை தவிர அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 130 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு கொரோனா தொற்று இல்லாததால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.