செய்திகள்

மது ஒழிப்பு பிரசாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு

திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் பெரும்பாலான பீர் ஆலைகள் தி.மு.க.வினருடையது தான். அதை மூடாமல் மதுவை ஒழிப்போம் என பிரசாரம் செய்து, தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மாலை மலர்

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை சட்டப் போராட்டம் மூலம் மூட வைத்ததற்காக பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு பா.ம.க. சார்பில் திருவள்ளூரில் பாராட்டு விழா நடைபெற்றது.

கூட்டத்தில் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் மதுவுக்கு எதிராக பெண்கள் வீரமாக போராட வேண்டும். அப்போது தான் தமிழகம் மது இல்லாத மாநிலமாக மாறும்.
கடலில் கச்சா எண்ணெய் கலந்தபோது அவற்றை வாளிகளில் அள்ளுவதும், வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மா கோலை கொண்டு மூடுவதும் என தமிழக அமைச்சர்களின் செயல்கள் பற்றி சமூக வலை தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

மது ஒழிப்பு பிரசாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில் உள்ள 11 மதுபான ஆலைகளில் 6 ஆலைகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் தான் இயங்குகிறது.

அதேபோல் தமிழகத்தில் உள்ள 7 பீர் ஆலைகளில் 6 திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் தான் இயங்குகின்றன. இவைகளில் பெரும்பாலான ஆலைகள் தி.மு.க.வினருடையது தான். அதை மூடாமல் மதுவை ஒழிப்போம் என பிரசாரம் செய்து, தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

அதிக அளவில் மது அருந்தும் மாநிலமாகவும், விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. மேலும் இளம் விதவைகள் அதிக அளவில் உள்ள மாநிலத்திலும் தமிழகமே முதலிடம்.

நாட்டில் மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாகவும், ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைகளாகவும் தரம் உயர வேண்டும். ஆனால் தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலையை மாநகராட்சி சாலைகளாகவும், மாநில நெடுஞ்சாலையை நகராட்சி சாலைகளாகவும் தரம் குறைக்க முயற்சித்தது. பா.ம.க. சார்பில் இதற்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெறப்பட்டுள்ளது.

அதேபோல் வறட்சி மாநிலம் எனக் கூறி, ரூ. 40 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்ட தமிழக அரசு, விவசாயிகள் யாரும் தற்கொலையால் சாகவில்லை என உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இனியும் இதுபோல் ஏமாற்றும் கட்சியினரை மக்கள் நம்பவேண்டாம்.

மேலும் இன்று நடைபெற உள்ள சிறப்பு கிராமசபா கூட்டங்களில் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.