கும்பகோணம்:
மகாமகத் தொடர்புடைய சிவன் கோவிலில் முக்கிய கோவிலாக திகழ்வது ஆதி கும்பேஸ்வரர் கோவிலாகும். இந்த கோவிலில் சுவாமி சன்னதியின் தெற்கு பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி சுவாமி சன்னதி உள்ளது. இந்த சன்னதிக்கு எதிரில் 63 நாயன்மார்கள் சிலைகளும் மற்றும் சப்த கன்னி சிலைகளும் உள்ளன.
இதன் ½ அடி உயரமுடைய சங்கரலிங்கம், ஈசானிய லிங்கம், மகாலிங்கம், பசுபதிலிங்கம் உள்ளிட்ட 8 பெயர்களில் கருங்கல் சிலைகள் உள்ளது.
வழக்கமாக இந்த கோவிலில் நடைபெறும் ஆறுகால பூஜையின் போதும் இந்த சுவாமிகளுக்கும் பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் இந்த எட்டு லிங்கங்களையும் தரிசிக்க பக்தர்கள் சென்றனர். அப்போது மகாலிங்க கருங்கல் சிலை மட்டும் காணாமல் போனதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மர்ம நபர்கள், ஆயுதங்களை கொண்டு அடிபீடத்துடன் அந்த சிலையை பெயர்த்து எடுத்துவிட்டு, 10 ரூபாய் நோட்டை அங்கு வைத்து, துணியால் மூடி சென்றுள்ளார்.
இதை பார்த்த பக்தர்கள் கோவில் செயல் அலுவலர் கவிதாவுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கோவில் பணியாளர்கள் அங்கு சென்று பார்வையிட்டு, கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற போது, இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில் கோவிலில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் இந்த திருட்டு சம்பவம் பதிவாகி உள்ளதா என்று கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.