திண்டுக்கல்:
மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் எல்.ஐ.சி. பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை தனியாருக்கு விற்க முடிவு செய்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் இன்று எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு மதியம் 12 மணி முதல் 1 மணி வரை வெளிநடப்பு செய்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காப்பீட்டு கழக ஊழியர்கள், ஏஜெண்டுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இன்சூரன்ஸ் ஊழியர் சங்க திண்டுக்கல் கிளை செயலாளர் பரத் தெரிவிக்கையில், எல்.ஐ.சி. நிறுவனம் நாடு முழுவதும் மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக உள்ளது. 1956-ம் ஆண்டு ரூ.5 கோடி என இருந்த இதன் பங்கு தற்போது பல லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசுக்கு ரூ.2600 கோடியை டிவிடெண்ட் பங்காக வழங்கியுள்ளது.
இது போன்ற லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். உடனடியாக இதனை திரும்ப பெறாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.