புதுடெல்லி:
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா அடுத்த மாதம் துவங்க இருக்கும் நிலையில், பல்வேறு நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. எல்ஜி ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் திரும்ப பெறப்படலாம் என சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், எல்ஜி ஜி சீரிஸ் கடைசி ஸ்மார்ட்போனாக எல்ஜி ஜி7 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் சார்ந்த பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அந்தவகையில் இம்முறை கசிந்திருக்கும் தகவல்களில் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் டூயல் செல்ஃபி கேமரா மற்றும் டி.எஸ்.எல்.ஆர். ரக செல்ஃபிக்களை எடுக்க வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் புதிய எல்ஜி ஸ்மார்ட்போனில் 3D முக அங்கீகார (Facial Recognition) அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்ற 3D முக அங்கீகார வசதி டூயல் செல்ஃபி கேமரா பயன்படுத்தி இயங்கும் என்றும், முந்தைய எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனினை விட முன்பக்கம் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகளை விட எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுக வழக்கத்தில் இந்த ஆண்டு முதல் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன (சி.இ.எஸ். 2018) விழாவில் எல்ஜி நிறுவன துணை தலைவர் சோ சங்-ஜின் தெரிவித்தார்.
மேலும் வெளியீட்டிற்கான தேவை ஏற்படும் போது மட்டுமே புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு நடைபெறும் என்றும், தற்போதைய மாடல்களுடன் பல்வேறு புதிய மாடல்கள் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சமீபத்தில் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் எல்ஜி சார்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் காப்புரிமைகளில் எல்ஜி ஐகான் (Icon), எல்ஜி ஏஐகான் (Aicon), மற்றும் எல்ஜி ஏகான் (Aiconn) உள்ளிட்ட பெயர்களில் புதிய சாதனங்கள் வெளியிடுவதற்கான காப்புரிமை கோரப்பட்டிருக்கிறது.