செய்திகள்

காஷ்மீர்: பயங்கர ஆயுதங்களுடன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பண்டிப்போரா மாவட்டத்தில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியை போலீசார் இன்று கைது செய்தனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பண்டிப்போரா மாவட்டத்திற்குட்பட்ட மார்குன்டல் என்ற கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கிராமத்தை போலீசார் இன்று சுற்றி வளைத்தனர். அந்த கிராமத்தின் நாற்புற வாயில்களும் அடைக்கப்பட்டு வீடு வீடாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.

அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஷாபாஸ் ரசூல் மிர் என்பவனை போலீசார் கைது செய்தனர். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தால் பயிற்சி அளிக்கப்பட்டு தாக்குதல் திட்டத்துடன் காத்திருந்த அவனிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை கைப்பற்றியுள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.