செய்திகள்

இந்துத்துவா தலைவர் ஒருவர் அடுத்த குடியரசு தலைவராக வரவேண்டும்: சிவசேனா

அடுத்த குடியரசுத் தலைவராக இந்துத்துவா தலைவர் ஒருவர் வர வேண்டும் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

மாலை மலர்

மும்பை:

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அடுத்த குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. குடியரசுத் தலைவர் பதவிக்கு மோகன் பகவத்தே சரியான தேர்வு என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் விருப்பம் தெரிவித்தார். 

ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை மோகன் பகவத் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனிடையே, வரும் ஜூலை 17-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்நிலையில், ‘இந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக இருக்கும் ஒருவர் அடுத்த குடியரசுத் தலைவர் ஆக வர வேண்டும் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் வெளியிட்டுள்ள செய்தி கட்டுரையில், “ராம ஜென்ம பூமி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் பிரிவு ஆகிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஹிந்து ராஷ்டிரா முத்திரை கொண்ட ஒருவர் தான் நாட்டிற்கு தேவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சிக்கு 63 எம்.எல்.ஏ.க்களும் 18 எம்.பி.க்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.