திருப்பதி:
திருப்பதி கபிலத்தீர்த்தம் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் அலுவலகம் அருகே சிறுத்தைப்புலி நடமாடியதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
நேற்று முன்தினம் இரவு சிறுத்தைப்புலியின் உறுமல் சத்தம் கேட்டதாக, அங்கு பணியில் இருந்த செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். சிறுத்தைப்புலியின் கால் தடம் மட்டுமின்றி, ஏதோ ஒரு வன விலங்கை வேட்டையாடி இழுத்துச் சென்றதற்கான தடமும் அப்பகுதியில் காணப்பட்டது.
சிறுத்தைப்புலியின் கால் தடத்தை செம்மரக்கடத்தல் தடுப்புப்பரிவு போலீஸ் ஐ.ஜி. காந்தாராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கபிலத்தீர்த்தம் வனப்பகுதியில் சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்தும், விஷ பூச்சிகளிடம் இருந்தும் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கபிலத்தீர்த்தம் வனப்பகுதியில் சிறுத்தைப்புலியின் கால் தடம் காணப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
திருப்பதி கபிலத்தீர்த்தம் வனப்பகுதியில் சிறுத்தைப்புலியின் கால் தடம் பதிந்திருப்பதை அதிகாரிகள் பார்வையிட்டனர்.